அமெரிக்கா: யார் அவர்? இன்னும் 3 நாளில் முடிவு தெரியும்… உலகையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவை ஆளப் போவது யார் என்பதை அமெரிக்கர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்னும் 3 நாளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதில், இந்திய வம்சாவளியும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப் இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபரானார். குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் தோல்வியை சந்தித்தார். பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதியுடன் முடிகிறது. இதற்கு முன்னதாக, அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடக்க உள்ளது.
இதில், அதிபர் ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகியதால் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். ஆரம்பத்தில் பைடன் களத்தில் இருக்கும் வரை, டிரம்ப்பின் கை ஓங்கியிருந்த நிலையில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் மாற்றப்பட்ட பிறகு நிலைமை மாறியது.
டிரம்ப்புடனான நேரடி விவாதத்தில் கமலா ஹாரிசின் படபட பதில்கள் அமெரிக்க மக்கள் மத்தியில் அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்தன. இதனால் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றார். எனவே கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக காணப்படுகின்றன. அவர் வெல்லும் பட்சத்தில் பல்வேறு சாதனைகளையும் படைப்பார். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபர் வெள்ளை மாளிகையில் நுழைவார்.
இதுவரை 2016ல் ஹிலாரி கிளிண்டன் மட்டுமே பெண் வேட்பாளராக தேர்தலை சந்தித்துள்ளார். அதிலும் அவர் டிரம்ப்பிடம் மண்ணை கவ்வினார். இதனால் கமலா ஹாரிஸ் வெல்லும் நிலையில், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரும் திருப்பமாக பார்க்கப்படும். மேலும், அமெரிக்க அதிபராகும் முதல் இந்திய வம்சாவளி என்ற பெருமையும் கமலா ஹாரிசுக்கு கிடைக்கும். அதே சமயம் டிரம்ப்பை பொறுத்த வரையில் தொழிலதிபர்களின் ஆதரவை பெற்றுள்ளார். குறிப்பாக, உலக நம்பர்-1 பணக்காரர் எலான் மஸ்க், டிரம்ப்புக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதனால், ஆரம்பத்தில் கமலாவிடம் பின்தங்கிய டிரம்ப் பின்னர் கடும் போட்டியாளராக மாறியிருக்கிறார். எனவே டிரம்ப் வெல்வதற்கும் வாய்ப்புகள் இருப்பதால், இம்முறை அதிபர் தேர்தல் முடிவு கணிக்க முடியாததாகவே உள்ளது.
நவம்பர் 5ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடக்கும். அதைத் தொடர்ந்து, உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். நள்ளிரவில் அல்லது அடுத்த நாள் அதிகாலையில் அமெரிக்காவின் 47வது அதிபர் யார் என்பது தெரியவரும்.