சென்னை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம், டிச., 28-ல் அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தனியார் அமைப்பின் இசை நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. இதில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக இருப்பது கவலை அளிக்கிறது. நீதிமன்ற வளாகத்தில் படுகொலைகள் நடக்கும்போது, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. கோவையில் பா.ஜ.க.வினர் நடத்திய போராட்டத்தில் அண்ணாமலை கூறிய கருத்து சட்டவிரோதமானது என்பதால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டம் தன் கடமையை செய்கிறது.
சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டுக்கு மேல் உள்ளது. இந்த நேரத்தில் யாருடன் கூட்டணி என்பது பற்றி பேச முடியாது. தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது. பாஜக-அதிமுக கூட்டணி வர வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அனைவரும் ஒன்றிணைந்தால் அது பலம். ஆனால் அதிமுகதான் இதில் முடிவெடுக்க வேண்டும்.
நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் மக்கள் பிரச்னைகளை பேசாமல் இரு கட்சிகளும் நேரத்தை வீணடித்து வருகின்றன. தேமுதிக அமைக்கும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேமுதிக தயாராக உள்ளது. விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவேந்தல் பேரணிக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் அழைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.