சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தை கடனில் மூழ்கடிக்கும் வகையில் வெறும் விளம்பர பட்ஜெட்டை ஸ்டாலின் கொடுத்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தமிழகத்தின் இரும்பு மனிதர் மற்றும் உலகத் தமிழர்களின் அடையாளமாகத் திகழ்கிறார். அதேபோல அமித் ஷா இந்தியாவின் இரும்பு மனிதர். அவரை பழனிசாமி சந்தித்தது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இந்த உண்மையை மறைக்க திமுக அரசு பல்வேறு செய்திகளை பரப்பி வருகிறது. தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிலுவை நிதியை உடனடியாக வழங்க வேண்டும். கல்வித் திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதியை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என வல்லபாய் படேலின் மறு அவதாரமான அமித்ஷாவிடம் மக்களின் கோரிக்கைகளை பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும். தொகுதி மறு நிர்ணயத்தால் தமிழகம் பாதிக்கப்படக்கூடாது. கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் இந்த சந்திப்பு குறித்து அனைவரும் தங்களது சொந்த கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருவரின் சந்திப்பு குறித்து ஜெயலலிதாவின் பேரவைத் தொண்டர்கள் இந்த விஷயத்தை மக்களிடம் பிரசாரமாக எடுத்துச் செல்வார்கள். ஆட்சி அதிகாரம் இல்லாவிட்டாலும், தமிழக மக்களுக்காக பாடுபடுகிறார் பழனிசாமி. ஆனால் தற்போது ஒரு குடும்பம், ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் நலனைப் பற்றி சிந்திக்காமல் குடும்ப நலனில் மட்டுமே சிந்திக்கிறது. இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் கூறினார்.