தஞ்சாவூர்: தஞ்சையில் போட்டியின்றி தேர்வான பாசனதாரர்கள் சங்க தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால், அக்னி ஆறு, பாலையன் ஏரி, முனியன் ஏரி, காதாட்டி ஏரி போன்ற பல்வேறு ஏரி , வாய்க்கால்களுக்கு பாசனதாரர்கள் சங்க தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே பாலமாக செயல்படுவார்கள்.
அதாவது விவசாயிகளின் கோரிக்கைகளை அந்தந்த பாசனத்தாரர் சங்க நிர்வாகிகள் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறுவர். தூர் வாருவது, ஏரி, குளங்களில் தண்ணீர் சேமித்து வைப்பது, தண்ணீர் திறப்பது உட்பட பல்வேறு விவசாயிகளின் கோரிக்கைகள், தேவைகளை அறிந்து அதிகாரிகளிடம் விளக்கி கூறுவர்.
இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி பாசனதாரர் சங்க தலைவர், உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பியவர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தனர். இதில் அந்தந்த பாசனதாரர் தலைவர், உறுப்பினர்கள் என அனைவரும் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதையடுத்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார் . நிகழ்ச்சியில் பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம், உய்யக்கொண்டான் கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனதாரர் சங்கத் தலைவர் மன்னர்மன்னன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.