கோவில்பட்டி: அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் பிரதமரை தமிழக முதல்வர் 45 நிமிடம் சந்தித்தபோது முதல் அரை மணி நேரம் மாநிலத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசியதாக வெளிப்படையாக கூறினர். ஆனால், கடந்த 15 நிமிடம் தலைமைச் செயலர் உள்ளிட்டோரை அனுப்பிவிட்டு, முதல்வர், எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் மட்டும் பிரதமரிடம் பேசியிருந்தால் அது அரசியலாகத்தான் இருக்க வேண்டும்.
அமைச்சரவையில் இருந்து அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டால் அவர் மீது ஏதாவது குற்றச்சாட்டு இருக்க வேண்டும். மற்றபடி டிபார்ட்மெண்டில் பிரச்னை வரும்போது விடுதலையாகி விடுவது சகஜம்.
ஆனால் அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் விடுதலையில் உள்ள மர்மத்திற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும். உதயநிதி நியமனம் ஸ்டாலினால் திமுகவை காப்பாற்றி ஆட்சியை நடத்த முடியவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
இது திமுகவில் வாரிசு அரசியலை நிரூபித்துள்ளது. இது மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளக் கூடிய அம்சமாக இருக்காது என்பது எமது கருத்து. இந்த அரசு மக்கள் விரோத அரசு.
அதிமுகவில் இருந்து யாரும் வெளியேறவில்லை. திமுகவின் புகழ் பாடும் வேலையை கமல்ஹாசன் செய்து வருகிறார். மக்கள் நீதி மய்யத்தை தி.மு.க.வுடன் இணைத்து விட்டோமே என்று நினைக்கும் நிலையில்தான் அவரது அரசியல் பயணம் உள்ளது.
ராஜ்யசபா எம்.பி., பதவிக்காக அவர் இப்படி தரம் தாழ்ந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.