புதுடெல்லி: இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதி பாஜக எம்.பி.யுமான நடிகை கங்கனா ரனாவத் நேற்று மணாலியில் பேசுகையில், “இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு கடன் வாங்குகிறது.
பின்னர் அது சோனியா காந்திக்கு பணத்தை மாற்றுகிறது. பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கினால், அந்த பணம் முதல்வர் நிவாரண நிதிக்கு செல்கிறது. பின்னர் அது சோனியா காந்திக்கு செல்கிறது,” என்றார்.
இதுகுறித்து அமைச்சர் விக்ரமாதித்ய சிங் நேற்று கூறுகையில், “மத்திய, மாநில அரசின் நிதியை சோனியா காந்திக்கு வழங்குவதை விட முட்டாள்தனமான எண்ணம் வேறு எதுவும் இருக்க முடியாது.
சோனியா காந்திக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் அதற்கான ஆதாரத்தை கங்கனா காட்ட வேண்டும். இல்லை என்றால் அவர் மீது வழக்கு தொடரப்படும். கங்கனா இமாச்சலப் பிரதேசத்துக்கு அடிக்கடி வருவதில்லை. அவர் நடித்த ‘எமர்ஜென்சி’ படத்திற்கு மத்திய சென்சார் போர்டு இன்னும் அனுமதி வழங்கவில்லை.
இதனால் கவலையடைந்த அவர், சோனியா காந்தி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். கங்கனா சமீபத்தில் தனது எமர்ஜென்சி திரைப்படம் மத்திய தணிக்கை வாரியத்தில் சிக்கியுள்ளதாக கூறினார்.
இப்படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடிக்கிறார்.