புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி கடை வீதியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரே குடும்பத்தில் இருந்து பலர் அரசியல் பதவி வகிப்பது புதிதல்ல. இது பல மாநிலங்களில், பல கட்சிகளில் நடந்துள்ளது.
அதேபோன்று ஒரு குடும்பம் தலைவராகவும், மற்றொரு குடும்பம் துணைத்தலைவராகவும் இருப்பது புதிதல்ல. மத்திய, மாநில அரசுகளின் அமைச்சரவையில் எந்த ஒரு அமைச்சரையும் நியமிக்கவும், மாற்றவும், நீக்கவும் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.
அந்த அடிப்படையில்தான் தமிழகத்திலும் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை கைது செய்து 400 நாட்களுக்கு மேல் சிறையில் அடைத்தது தவறு.
வழக்கை விசாரித்து தண்டனை அனுபவிப்பது வேறு. விசாரணையின்றி சிறையில் அடைப்பதை ஏற்க முடியாது. வருங்காலத்தில் இந்த நடைமுறைக்கு நீதிமன்றங்கள் தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தண்டனை உறுதி செய்யப்படாமல் ஒரு வழக்கை காரணம் காட்டி யாருக்கும் அமைச்சர் பதவியை மறுக்க முடியாது. பொதுவாக, தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள் அமைச்சர் பதவிக்கு தகுதியானவர்களாகவே கருதப்படுவார்கள்.
பா.ஜனதாவுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் பத்திரத்திற்கும், அமலாக்கத்துறையின் வழக்குக்கும் தொடர்பு உள்ளதா என்பதை விசாரித்து தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.