டெல்லி: பிரதமர் மோடியின் நண்பர்களின் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவே பாஜக சித்தாந்தம் என்று டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதில் பாஜகவின் சித்தாந்தம் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். வரும் 5ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலையொட்டி ஆம் ஆத்மி-யும், பாஜகவும் பரஸ்பர குற்றச்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால்; மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 500 தொழிலதிபர்களின் ரூ.10 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்திருப்பதாக கூறினார்.
இதில் குறிப்பிட்ட ஒரு தொழிலதிபருக்கு மட்டுமே ரூ.46,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக சாடிய அவர், மற்றொரு தொழிலதிபர் ரூ.6,500 கோடி கடனை திருப்ப செலுத்த வேண்டிய நிலையில், அவருக்கு ரூ.5,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த நாட்டில் ஏழைகள், நடுத்தர வர்க்க மக்கள் பல்வேறு வகைகளில் அரசுக்கு வரி செலுத்திகின்றனர் என்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு மக்களின் மீது மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இவ்வாறு பெறப்படும் வரியை மக்கள் நலன்களுக்கு செலவிட வேண்டுமே தவிர தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என கெஜ்ரிவால் தெரிவித்தார்.