மதுரை: மதுரையில் அனுமதியை மீறி பேரணி செல்ல முயன்றதாக குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகுத் தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தைக் கண்டித்து, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் போராட்டத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில், மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளுக்கு உரியத் தண்டனையை உறுதி செய்யவும் பாஜக மகளிர் அணி சார்பில் போராட்டம்,பேரணி அறிவிக்கப்பட்டது.
இந்த பேரணி குஷ்பு முன்னிலையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் பேரணி திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம் வழியாகச் சென்னை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இதனை மீறி பேரணி செல்ல முயன்றதாக குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.