குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் மோடி கடந்த 2-ம் தேதி தொடங்கி வைத்தார். உலகிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சி.
தற்போது பாஜக 10 கோடி உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தமிழக முதல்வர் ஏற்கனவே ஸ்பெயின், துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்றபோது, பெற்ற முதலீடு குறித்து கேள்வி எழுந்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருப்பதாக அவர் கூறும் நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் உள்ளன.
இது ஒரு கண் துடைப்புக்கான பயணம். அவரது வருகையால் தமிழகத்திற்கு எந்த முதலீடும் வராது. தமிழகத்தில் ஆன்மிகம் பற்றி பேசுபவர்களை கைது செய்யும் நோக்கில் திமுக அரசு செயல்படுகிறது. தமிழ்நாடு ஒரு சிறந்த ஆன்மீக பூமி.
ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஆண்ட பூமி. போலி திராவிடத்திற்கு இங்கு இடமில்லை. பாஜக எங்கும் ஹிந்தியை திணிக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையின் மூலம், தொடக்கக் கல்வியை தாய் மொழியான தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தற்போதைய காலகட்டத்தில், புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையை ஏற்க வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் உரிய நிதி வழங்கப்படும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.