புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை ஒட்டி அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், இன்று காலை 11 மணியளவில் மத்திய மந்திரிசபை கூடுகிறது. டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கர்நாடகாவில் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும். இன்று (27-ம் தேதி) ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என கர்நாடக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.