சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:- தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றினாலும், நிறைவேற்றப்படாத பல முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என, மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பாக, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு, குறு தொழில் முனைவோர் மத்தியில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி ஏழை, எளிய மக்களின் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவில் நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து, மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்களும் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என எதிர்பார்க்கின்றனர். 4 ஆண்டுகள் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தியுள்ளது.