சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டம் தொடர்பான வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த ஆண்டு, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வழக்கு, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.
செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ம.கௌதமன், தடயவியல் துறை கணினிப் பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். இந்த குறுக்கு விசாரணை நிறைவடையாததால், விசாரணையை நவம்பர் 7-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.