சென்னை: சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், தொழிலதிபருமான அதானி மற்றும் அவரது குழும நிறுவனங்களின் அதிகாரிகள் மீது, அமெரிக்க நீதித்துறை ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இந்த செய்தி வெளியான அடுத்த வினாடியில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அதானி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை” என்று தெளிவுபடுத்தினார்.
அதற்கு தமிழக முதல்வரும் பொறுப்புடன் பதிலளித்து, “அந்த துறை சார்பில் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளோம்” என்று கூறியுள்ளார். ஆனால், முதலமைச்சரின் பதில்களைப் பயன்படுத்தி, பாமக, பாஜக மற்றும் பரிவாரங்கள் ஒரே குரலில் கூக்குரலிட்டு, அதானி மீதான குற்றச்சாட்டுகளை மூடி மறைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்பும் மலிவு செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலமைச்சரை மையமாக வைத்து பிரச்சாரம் செய்யும் பாமக, பாஜகவினரின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.