சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதற்கு அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார். இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2000 பேருக்கு 5 கிலோ அரிசி, சேலை, இனிப்பு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, அவர் கூறியதாவது:-
என்னை கிறிஸ்தவனாக நினைத்தால் நான் கிறிஸ்தவன், இந்து என நினைத்தால் நான் இந்து, முஸ்லீமாக நினைத்தால் நான் முஸ்லிம். நான் அனைவருக்கும் பொதுவானவன். அரசியல் சாசனத்துக்கு எதிராக பேசிய நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானத்தை கூட ஆதரிக்காத அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அதிமுகவும் ஆதரித்துள்ளது.
இதன் மூலம் இவர்களின் கூட்டணி வலுவாக உள்ளதாக தெரிகிறது. அம்பேத்கர் குறித்து அமித்ஷா கூறியது குறித்து எடப்பாடியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஜெயக்குமார் கூறியதுதான் எனது நிலைப்பாடு என்றார். இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவரை எங்கேயாவது பார்த்தீர்களா? உலக வரலாற்றில் இப்படி ஒரு விளக்கத்தை யாரும் கேட்டதில்லை. அம்பேத்கர் குறித்து அமித்ஷா கூறிய கருத்துகள் பாஜகவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
அது பா.ஜ.க.வுக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தமிழக மக்களுக்கு எப்போதும் தெரியும். அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளோம். இனிமேல் பாஜகவுடன் அதிமுக போலி கூட்டணி என்று சொல்ல வேண்டியதில்லை. நல்ல கூட்டணியாக மக்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். நல்ல கூட்டணியாக மாறியது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் பாஜகவுக்கு எதிராகவோ, விமர்சித்தும் ஒரு தீர்மானம் கூட வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா, பீட்டர் அல்போன்ஸ், எம்எல்ஏ தாயகம் கவி, பகுதி செயலாளர்கள் ராஜசேகர், முரளி, மண்டலக்குழு தலைவர் ஸ்ரீராமுலு, பேரவை உறுப்பினர் பரிமளம், செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் அணியினர், பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர்.