நெல்லை: ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பதவி தொடர்பாக இதுவரை அ.தி.மு.க. கொறடா புகார் தரவில்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கோதையாறு பாசன திட்டத்தின் கீழ் ராதாபுரம் கால்வாயில் இன்று காலை தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீரானது அடுத்த 138 நாட்களுக்கு அதாவது வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை பாசனத்திற்காக திறந்து விட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:
முதலமைச்சர் உத்தரவின் பேரில் ராதாபுரம் தாலுகாவில் உள்ள 10 கிராமங்களில் கிட்டத்தட்ட 17 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் தற்போது இந்த தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தோவாளை கால்வாய் வழியாக நிலப்பாறை என்ற இடத்தில் இருந்து இன்று முதல் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வீதம் திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆயிரத்து 13 ஏக்கர் நிலம் 52 குளங்கள் மூலமாக பாசன வசதி பெறும். மீதமுள்ள நிலங்கள் நேரடி பாசன நிலங்களாக இருந்தாலும் கடந்த காலங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நேரடியாக சென்றதில்லை. இந்த முறை இந்த குளங்களை நிரப்ப வேண்டும் என்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரட்டை இலை சின்னத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக களத்தில் நின்று அ.தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டு உள்ளார். அ.தி.மு.க.வில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பலர் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு கொறடாவும் இருக்கிறார். கொறடா முறைப்படி இது போன்ற புகார்களை எனக்கு எழுதி தர வேண்டும். இதுவரை அ.தி.மு.க.வினர் ஏனோ தெரியவில்லை புகார் மனு எதுவும் என்னிடம் தரவில்லை. ஆனாலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 10-வது அட்டவணைபடியும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும் ஒரு சின்னத்தில் வெற்றி பெற்று அந்த சின்னத்திற்கு எதிராக ஓட்டு போட்டாலோ அல்லது இவர்கள் சொல்வது போல் அந்த கட்சிக்கு எதிராக அவரது செயல்பாடு இருந்தாலும் நிச்சயமாக அதற்கு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த விவகாரம் எனது ஆய்வில் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.