அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார வழக்கில், தி.மு.க.,வினரை பாதுகாக்க, அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை கசிந்தது கண்டனத்துக்குரியது. அந்த புகாரில், “அந்த ஜென்டில்மேனுடன் சிறிது காலம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஜென்டில்மேன் யார் என்று எங்களுக்கும் தெரிய வேண்டும். உண்மையான குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அந்த ஜென்டில்மேன் யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து வருகின்றனர். அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் “யார் சார் அது?” என்ற பேனர்களை வைத்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
ஆனால் அவர்கள் மீது திமுக அரசு பல வழக்குகளை தொடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. திமுக அமைச்சர்கள் யாரையோ காக்கப் பார்க்கிறார்கள். அதை மறைக்க, கைது செய்யப்பட்டவர் திமுக நிர்வாகி இல்லை என பொய்களை பரப்பி வருகின்றனர். கைதான ஞானசேகரன் குற்றப் பின்னணி கொண்ட குற்றவாளி. போலீசார் கண்காணிக்காததால் வழக்கம் போல் பல்கலைகழகத்தில் சுற்றித்திரிந்துள்ளார்.
சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு குறித்த உண்மைகள் வெளிவர வேண்டும். திமுகவில் இல்லாதவர் எப்படி திமுக பவளவிழாவில் கலந்து கொள்ள முடியும்? ஞானசேகரன் வீட்டில் அமைச்சர் உணவு உண்ணும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதை சொன்னால் திமுக நிர்வாகி இல்லை என்கிறார்கள். கடந்த 2024-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமைகளின் ஆண்டாக மாறியுள்ளது.
2025 பெண்களுக்கு பாதுகாப்பான ஆண்டாக இருக்கும் என்று நம்புவோம். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலம் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை தற்போது திமுக அரசு செயல்படுத்தியுள்ளது என்றார் பழனிசாமி.