சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் இந்திய ஜனநாயகக் கட்சி, அமமுக, பாமக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 1,000 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெறுகிறது. இதில் பழனிசாமி பேசியதாவது:- திமுகவை ஒழிக்க தொடங்கப்பட்ட கட்சி அதிமுக. இந்தக் கட்சியில் சேருபவர்களுக்கு எப்போதும் உரிய மரியாதை அளிக்கப்படும்.
அம்மா மினி கிளினிக் திட்டம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல திட்டங்களை திமுக அரசு ரத்து செய்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 120 நாட்களாக உயர்த்தி அறிவித்தனர். ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. வீட்டுத்திட்டத்தையும் நிறுத்திவிட்டனர். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
தமிழகத்தில் தினமும் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதுவரை கஞ்சா புழக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை. மக்கள் மீது பெரும் சுமையை ஏற்றி, சொத்து வரி, மின் கட்டணத்தை அதிகரித்து வருகின்றனர். கூட்டணியை நம்பித்தான் திமுக தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால், அதிமுக மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறது.
வரும் சட்டசபை தேர்தலில் பொதுமக்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை அதிமுக அமைக்கும். இவ்வாறு பழனிசாமி கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, “மத்திய அமைச்சர் அமித் ஷா தொடர்பான சர்ச்சைக்கு முன்னதாக, அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை தெரிவித்துள்ளார். அதுவே எனது கருத்து” என்று கூறினார்.