சென்னை: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வேண்டாம். பாண்டிய மன்னர் பெயரை வைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்கு கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களைத் தொடர்ந்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சமூகம் சார்ந்து ஒவ்வொருவரும் பேசுவார்கள். ஒரு சமூகத்தினர் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்றும், ஒரு சமூகத்தினர் இமானுவேல் சேகரன் பெயர் வைக்க வேண்டும் என்பார்கள். எங்கள் நிலைப்பாடு எந்த தாத்தா பெயரும் வேண்டாம். எங்களுக்கு ஒரு வரலாற்று பெருமை உள்ளது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற பெயர் வைக்க வேண்டும். யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
சாதாரண குடிமகளான கண்ணகி கால் சிலம்பை உடைத்தபோது, அரசவையில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் நினைத்தானே அவன் பெயர் வைக்க வேண்டும். அதுதான் எங்களுக்கு பெருமை, நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடும் இதுதான்.
நீங்கள் வைப்பதாக இருந்தால் நான் போராடி பாண்டிய நெடுஞ்செழியனின் பெயரை வைக்க வேண்டும் என்று சண்டை போடுவேன். இல்லையென்றால் நான் வந்தால் வைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.