சென்னை: அமைச்சர் உதயநிதிக்கு எதிராக ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்த சட்டப் பேரவை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், உயர்நீதிமன்ற முதுநிலை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் செய்த திமுக இளைஞரணிச் செயலாளரான தற்போதைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்துப் பேசியிருந்தார்.
அதன்பிறகு, பொள்ளாச்சி ஜெயராமன், உதயநிதி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரர் பொள்ளாச்சி ஜெயராமன் முதுநிலை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிட்டது.
அதன்படி, பொள்ளாச்சி ஜெயராமன் இன்று (செப்டம்பர் 10) முதுநிலை நீதிமன்றத்தில் நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் முன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ குறுக்கு விசாரணை நடத்தினார்.
குறுக்கு விசாரணை நிறைவடையாததால், வழக்கு விசாரணையை செப்டம்பர் 24-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.