புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், தேசிய சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பாஜகவும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் தனித்துப் போட்டியிடுகின்றன.
இதனால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. மேலும், பொறியாளர் ரஷீத், முன்னாள் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட சிறிய கட்சிகளும், செல்வாக்கு மிக்க சுயேச்சைகளும் தனித்து போட்டியிடுகின்றனர்.
வாக்குகளை பிரிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காஷ்மீர் சட்டசபை தேர்தல் தொடர்பாக நேற்றிரவு பல்வேறு ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.
தைனிக் பாஸ்கர் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 20-25 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 35-40 இடங்களும், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 4-7 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 12-18 இடங்களும் கிடைக்கும்.
இந்தியா டுடே – சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, பாஜகவுக்கு 27-32 இடங்களும், காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கூட்டணிக்கு 40-48 இடங்களும் கிடைக்கும்.
பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பின்படி, பாஜகவுக்கு 23-27 இடங்களும், காங்கிரஸ்-என்.சி கூட்டணி 46-50 இடங்களைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஹரியானாவில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சி 88 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஜன் நாயக் ஜனதா மற்றும் ஆசாத் சமாஜ் (கான்சிராம்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
அதேபோல் இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் இறங்குகின்றன.
ரிபப்ளிக் பாரத்-மேட்ரிக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, காங்கிரசுக்கு 55 முதல் 62 இடங்களும், ஆளும் பாஜகவுக்கு 18 முதல் 24 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 2 முதல் 5 இடங்களும் கிடைக்கும்.
தைனிக் பாஸ்கர் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரசுக்கு 44-54 இடங்களும், பாஜகவுக்கு 19-29 இடங்களும் கிடைக்கும்.
பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பின்படி காங்கிரசுக்கு 49-61 இடங்களும், பாஜகவுக்கு 20-32 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 3-5 இடங்களும் கிடைக்கும். பி மார்க் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 27-35 இடங்களும், காங்கிரசுக்கு 51-61 இடங்களும் கிடைக்கும்.
துரூவ் ரிசர்ச் நடத்திய சர்வேயில் பாஜகவுக்கு 22-32 இடங்களும், காங்கிரசுக்கு 50-64 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 2-8 இடங்களும் கிடைக்கும். காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் தலா 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
இரு மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின்படி, காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.
முன்னணி ஹிந்தி நாளிதழ் தைனிக் பாஸ்கர் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, காஷ்மீரில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது. அந்த நாளிதழில், “காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணிக்கு 40 இடங்கள் வரை கிடைக்கலாம்.
பெரும்பான்மைக்கு 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி 7 இடங்கள் வரை பெறலாம். எனவே, மெகபூபா கிங் மேக்கராக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.