திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் எம்பியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று பிரியங்கா காந்தி வந்தார். அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார்.
மலப்புரம் மாவட்டம் முக்கம் பகுதியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:- நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வயநாட்டு மக்களுக்கான எனது போராட்டம் தொடங்கியுள்ளது. உங்களுக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு நன்றாக தெரியும். அவற்றையெல்லாம் தீர்த்து வைப்பதே எனது முதல் கடமை. பாஜகவுக்கு அரசியல் மரியாதை கிடையாது.
நாட்டில் தேர்தல் நடைமுறைகள் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. நாட்டை நிலைநிறுத்தும் அடிப்படைகளுக்காக நாம் போராட வேண்டும். வயநாட்டு மக்களுக்காக நான் நாடாளுமன்றத்தில் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி பேசியதாவது:- நாம் அனைவரும் காதல் பற்றி பேசும்போது, வெறுப்பு அரசியலை பாஜக பேசுகிறது. வயநாட்டில் பேரிடர் ஏற்பட்டாலும் மக்களுக்கு உதவ மோடி தயாராக இல்லை. இந்திய அரசியலமைப்பை காப்பாற்ற போராடுகிறோம்.
இந்தியர்கள் அனைவரும் சமம் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. ஆனால், அதானிக்கு மட்டுமே சிறப்பு உரிமை உண்டு என்கிறார் மோடி. சிபிஐ உட்பட அனைத்து புலனாய்வு அமைப்புகளும் அவர்களின் கைகளில் உள்ளன. ஆனால் மக்களின் இதயம் எங்கள் கைகளில் உள்ளது. பாஜகவின் கொள்கைகளை நம்மால் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மலப்புரம் மாவட்டத்தில் 2 இடங்களில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டு பேசினர். அதன் பிறகு ராகுல் காந்தி டெல்லி புறப்பட்டு சென்றார். இன்றும் வயநாட்டில் நடைபெறும் கூட்டங்களில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசுகிறார்.