கரூர்: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமாரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கரூரில் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது தொடர்பாக போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்த போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் முன் ஜாமின் கேட்டு ஐகோர்ட்டில் மனு செய்துள்ளனர். நாளை அந்த மனு விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்னதாக இன்று இரவுக்குள் அவர்களை கைது செய்ய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இருவரின் நண்பர்கள் வட்டாரத்தில் இன்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். நிர்மல் குமார் உதவியாளரிடமும் போலீசார் நீண்ட நேரம் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.
அதன் அடிப்படையில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவரையும் பிடிப்பதற்கு தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
நேற்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் அவர்கள் பங்கேற்கவில்லை. ரகசிய இடத்தில் இருந்தபடி அவர்கள் கட்சி நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.