சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் தொடங்கியது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் மற்றும் தொழிலதிபர் ரத்தன் டாடா, சி.பி.எம். பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா இரங்கல் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 2,523 பேர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் 1,000 பேர் பங்கேற்கின்றனர். சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் 2026 சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டு 2026 சட்டசபை தேர்தல் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவை வெற்றிகரமாக நடத்தியதற்காக இபிஎஸ்க்கு நன்றி தெரிவித்து தீர்மானம். டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம். தமிழகத்திற்கு பாரபட்சமின்றி மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2026-ல் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகளை சரிசெய்து நேர்மையான தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக சேர்க்க வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.