சென்னை: எனது எஞ்சிய காலத்தையும் தமிழக நலனுக்காக செலவிட உள்ளேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னை தாயகத்தில் சமத்துவ நடைபயணத்திற்கு வீரர்கள் நேர்காணல் நடைபெற்றது. பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சியில் ஜனவரி 2-ந்தேதி ம.தி.மு.க.வின் சமத்துவ நடைபயணம் தொடங்குகிறது. மதுரையில் இந்த பயணம் 12-ந்தேதி நிறைவடைகிறது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதனால் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விழிப்புணர்வு நடைபயணம் நடக்கிறது.
திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த பயணத்தில் சுமார் 1000 வீரர்கள் என்னோடு கலந்து கொள்கிறார்கள். இது எனது 11-வது நடை பயணமாகும். தமிழக அரசு போதைப் பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சாதி மத மோதல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இது அமைகிறது.
தமிழகத்தின் நலனுக்காக எனது எஞ்சிய காலத்தையும் செலவிட முடிவு செய்து இந்த பயணத்தை மேற்கொள்கிறேன். திராவிட இயக்கத்துக்கு எதிராக இந்துத்துவா சக்திகள் எதிர்த்து வருகின்றன. அதனை முறியடிக்கும் வகையிலும் இந்த பயணம் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஜீவன், தொண்டர் படை தலைவர் பாஸ்கர சேதுபதி, வக்கீல் நன்மாறன், கழக குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.