டெல்லி: தொகுதி சீரமைப்பு மூலம் தென் மாநிலங்களை பழிவாங்கும் அரசியலை பாஜக மேற்கொண்டு வருவதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் கூறியுள்ளார். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் சீரமைக்க தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-
மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்பது மத்திய அரசின் திட்டமாகும். அதைத்தான் தென் மாநிலங்கள் செயல்படுத்தின. தொகுதி மறுசீரமைப்புப் பணியை 30 ஆண்டுகளாக மத்திய அரசு நிறுத்தினால், தென் மாநிலங்களின் மக்கள் தொகைப் பெருக்கம் என்னவாக இருக்கும் என்பதை பார்க்கலாம். இந்த சீரமைப்பு செயல்முறை குறித்து, விகிதாசார அடிப்படையில் மக்களவை ஆசனங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களை பழிவாங்கும் அரசியலை பாஜக மேற்கொண்டு வருகிறது. தென் மாநிலங்களில் பிரதிநிதித்துவம் இல்லாததால் பழிவாங்கும் அரசியலை பாஜக மேற்கொண்டு வருகிறது. தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்க பா.ஜ.க விரும்புகிறது; இந்த நடவடிக்கை வட மாநிலங்களுக்கு அதிக பலன் தரும். இந்த விவகாரத்தில் விரிவான ஆலோசனை தேவை. எனவே, தேசிய அளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, தொகுதி மறு பங்கீடு குறித்து விவாதிக்க வேண்டும் என்றார்.