கோவை: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நம்பர் 1 ப்ரோக்கர் என அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைகும் இடையே வார்த்தைப் போர் முற்றத் தொடங்கியுள்ளது.
கோவையில் செந்தில் பாலாஜி பேசும்போது, அண்ணாமலை நேர்மையான அரசியல்வாதியா? கடந்த முறை அவர் போட்டியிட்ட அரவக்குறிச்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ.1000 பணம் கொடுக்கவில்லையா?, அண்ணாமலை இதற்கு பதில் சொல்லட்டும் என கூறியிருந்தார். மேலும், யார் யார் எங்க இருக்க வேண்டுமோ அவர்கள் இப்போது அங்கே இருக்கிறார்கள் என அண்ணாமலைக்கு சட்டப்பேரவை தேர்தலில் சீட் கிடைக்காதது குறித்த கேள்விக்கும் செந்தில்பாலாஜி பதில் அளித்தார்.
இந்த கேள்விகளுக்கு இன்று கோவை விமான நிலையத்தில் பதில் அளித்த அண்ணாமலை, செந்தில் பாலாஜி மற்றும் அவர் தம்பியை ஒருமையில் காட்டமாக விமர்சித்தார். அண்ணாமலை பேசும்போது, “கோவை மாவட்டம் முழுவதும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி பினாமிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீதி வீதியாக சென்று பணம், வாட்ச் உள்ளிட்ட பரிசு பொருட்கள் விநியோகித்து வருகின்றனர். கரூரில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்திருக்கிறார் செந்தில் பாலாஜி.
எத்தனை ஆட்களை கோவைக்கு கொண்டு வந்தாலும் இம்முறை செந்தில் பாலாஜி வெற்றிப் பெறப்போவதில்லை. அவரை அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன் எளிமையாக தோற்கடித்துவிடுவார்கள். கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜியில் தொடங்கி சென்னை சேப்பாக்கம் வரை இந்த தோல்வி எதிரொலிக்கும். திமுகவுக்கு தோல்வியே கொங்கு மண்டலத்தில் இருந்து தான் தொடங்கப்போகிறது.
செந்தில் பாலாஜி கரூருக்கு செல்கிறார், கோவைக்கு வருகிறார். அவர் என்ன செய்தாலும் இம்முறை தோல்வியை தவிர்க்க முடியாது. செந்தில் பாலாஜி ஒரு நம்பர் 1 ப்ரோக்கர், அவர் 300 நாட்களுக்கும் மேல் சிறையில் இருந்திருக்கிறார். அவரது தம்பி தலைமறைவாக ஓடி ஒளிந்தவர். இப்போது கரூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.
ஆனால், இந்த தேர்தலில் செந்தில் பாலாஜிக்கு தோல்வி உறுதி. நான் அரவக்குறிச்சி உள்ளிட்ட எந்த தேர்தலில் போட்டியிட்ட போதும் பணம் கொடுக்கவில்லை. நீங்களே கோவை தொகுதியோ அல்லது அரவக்குறிச்சி தொகுதிக்கோ நேரடியாக சென்று மக்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். அண்ணாமலையாகிய நான் நேர்மையான அரசியலை முன்னெடுக்கிறேன்.
திமுக கூட்டணிக்குள் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. ராகுல்காந்தி ஒருமுறைகூட புதுச்சேரியில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தவில்லை” என பேசினார்.