சென்னை: திரையுலகில் நிலவும் பிரச்னைகள் தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை சந்தித்து பேசினார். அதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
நடிகை கஸ்தூரி பேசியது பெரிய தவறு. தமிழகத்தில் பிராமணர்களுக்கு ஆணவக்கொலை நடக்கவில்லை, மாறாக பாஜவில் நடக்கிறது. அதனால் தான் பா.ஜ.,வில் இருந்து விலகினேன். 10 ஆண்டு பாஜவில் பட்ட பாடு போதும். எனக்கு கட்சி அடையாளம் தேவையில்லை. கட்சிக்கு நான் தேவை. அரசியலோடும் தரத்தோடும் அண்ணாமலை எங்கும் இருக்க முடியாது.
10 வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லை என்பதற்காக பாஜ எடுக்கும் படத்தில் நடிக்க முடியுமா? பிராமணர்களுக்கு நல்லது நடந்தால் வரும் தேர்தலில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்வேன். தமிழ்நாட்டு பாஜவில் பிராமணர்கள் அல்ல எவருக்கும் நம்பிக்கை இல்லை. தமிழகத்தில் தாமரை மலராது. இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.
முன்னதாக, திரையுலகில் உள்ள டப்பிங் சங்கத்தை சேர்ந்தவர்களை பழிவாங்கிய நடிகர் ராதாரவி, சுமார் ரூ.2 கோடி வருமானம் ஈட்டி வந்த டப்பிங் சங்க கட்டிடத்தை இடிப்பதற்கு காரணமாக இருந்தார். அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்குவதாக ராதாரவி கூறி வருகிறார். சினிமா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு பல உதவிகளை செய்து வருகிறது. இதையும் ராதாரவி தவறாக பேசுகிறார்.
இதுகுறித்து விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் எஸ்.வி.சேகர் மனு அளித்தார்.