சென்னை: உரிமைகளைக் காக்க போராடுவதற்கான ‘இன்ஸ்பிரேசன்’ தான் தமிழ்நாடு என்று தெலுங்கானா பிஆர்எஸ் கட்சி முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தெலங்கானாவின் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ராமாராவ் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை, நமது மாநிலங்களுக்கான நிதி ஆதாரத்தைப் பெரிதும் பாதிக்கும். இந்த அநீதிக்கு எதிராகத் தென் மாநிலங்கள் குரல் கொடுக்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது. கூட்டாட்சி என்பது பரிசு அல்ல, உரிமை என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது. உரிமைகளைக் காக்க போராடுவதற்கான இன்ஸ்பிரேசன் தான் தமிழ்நாடு. இந்த கூட்டத்தை நடத்தியதற்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.