திருவாரூர்: தமிழக அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டந்தோறும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி நேற்று திருவாரூரில் ஆய்வு செய்துவிட்டு இரவு சன்னதி தெரு வீட்டில் தங்கினார். இரண்டாவது நாளாக இன்றும் ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு துறைவாரியாக நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:- திருவாரூரில் 2 நாட்களாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் உத்தரவின்படி 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை திணிப்பு, நிதிப் பங்கீட்டில் பாரபட்சம் போன்ற பிரச்னைகள் நிலவி வருவதால், இதை திசை திருப்பும் வகையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம், கிடங்குகளில் ஏஜென்ட், அமலாக்க இயக்குனரகம் மூலம் ரெய்டு நடத்தி பிரச்னையை திசை திருப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது.
நீட் தேர்வுக்கு திமுக சார்பில் 1 கோடி கையெழுத்து பெறப்பட்டபோது பள்ளி மாணவர்களை தவிர்த்து கையெழுத்து பெறப்பட்டது. ஆனால், மும்மொழிக் கொள்கைக்காக சிறு பள்ளி மாணவர்களிடம் கையெழுத்துப் பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.