சென்னை : மாணவர்களுக்கு ரூ.1,000 கொடுப்பதால் கல்வி அறிவு கிடைத்துவிடாது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. கவர்னர் ஆர்.என்.ரவி விழாவுக்கு தலைமை தாங்கி, அம்பேத்கரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தமிழில் கவர்னர் கூறினார்.
தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: மிகவும் உயர்ந்த, ஆளுமை நிறைந்த மனிதர் அம்பேத்கர். அவர் வகுத்த சட்டங்களும், அவரது பொதுவாழ்க்கையும் மிகவும் பெருமைக்குரிய விதமாக அமைந்துள்ளது. அத்துடன் சிறந்த அறிவியல் அறிஞர், அரசியல் வித்தகர் மற்றும் பொருளியல் வல்லுனராக அம்பேத்கர் திகழ்ந்தார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டவர். ஆனால் அவர் யாரையும் பழிவாங்கவில்லை. கடுமையாக உழைப்பால் உயர்ந்தவர். அவர் வெறும் பட்டியலின மக்களுக்கு மட்டுமே தலைவர் இல்லை. அவர் பாரதியின் பெருமைக்குரிய மகனும் கூட. நமது பட்டியலின சகோதர, சகோதரிகள் இதுவரை வாக்கு அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தபட்டு வருகின்றனர்.அம்பேத்கர் கண்ட கனவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
சமூக நீதி குறித்து பேசும் இந்த மாநிலத்தில் செருப்பு போட்டு செல்வதற்காகவும், இரு சக்கர வாகனத்திற்காகவும் பட்டியிலன மக்கள் தாக்கப்படுகின்றனர். கள்ளக்குறிச்சியில் அதிகார வர்க்கத்துடன் தொடர்புடைய கள்ளச்சாராய மாபியாக்களால் பரிதாபமாக தலித் மக்கள் உயிரிழந்தனர். வேங்கைவயலில் மனிதக்கழிவை குடிநீரில் கலந்த இழிவான சம்பவம் இங்கேதான் நடந்தது. அடிப்படை கல்வி பட்டியலின மக்களுக்கு கிடைக்கவில்லை. கல்வி அறிவு, திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும். ரூ.1,000 கொடுப்பதாலும், பட்டம் வழங்கப்படுவதாலும் ஒன்றும் வளர்ச்சி அடைந்துவிடாது. இவ்வாறு அவர் கூறினார். தமிழக கவர்னர் இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.