சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் உலா வருகிறது.
தமிழக ஆளும் திமுக அரசுக்கு பெரும் இடைஞ்சலாகவே இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அமைச்சர்களில் துவங்கி முதல்வருடனும் அவருக்கு மாற்றுக்கருத்து பெரிதாகவே உள்ளது. சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததில் துவங்கி, திருவள்ளுவர் சர்ச்சை, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியுடன் ஏற்பட்ட பிரச்சனை என பிஸியாகவே உள்ளார் ஆர்.என்.ரவி.
திமுக கூட்டணி கட்சிகளும் அவரை வெளியேற வேண்டும் என்றெல்லாம் கடுமையாக பேசினார்கள். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31- ம் மாதத்துடன் முடிவடைவதாக தகவல் உள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 2021-ம் ஆண்டு ஆளுநராக வந்தவர், அதற்கு முன்னர் இரண்டு ஆண்டுகள் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ஆளுநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகத்திற்கு புதியதாக ஆளுநர் நியமிக்கப்படுவாரா? அல்லது ஆர்.என்.ரவியே நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 15-ஆம் தேதி டெல்லி சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு பிரதமர் மோடியில் துவங்கி மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான், கிரண் ரிஜிஜு ஆகியோரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.