புதுடெல்லி: தன்னை சீமான் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் போலீசில் கடந்த 2011-ம் ஆண்டு புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கடந்த 2011-ம் ஆண்டு சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி அமர்வு, சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி சீமான் தாக்கல் செய்த மனுவை பிப்ரவரி 17-ம் தேதி தள்ளுபடி செய்தது.
மேலும், கருக்கலைப்பு உள்ளிட்ட குற்ற வழக்குகளுக்கு ஆதாரம் இருப்பதால், சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் வளசரவாக்கம் போலீஸார் 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராகி, போலீஸார் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.வி., நாகரத்னா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
சீமான் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “மனுதாரர் சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு தொடரப்பட்ட பாலியல் புகார் அரசியல் காரணங்களுக்காக மூடி மறைக்கப்பட்டுள்ளது. சீமான் மீது புகார் அளித்த நடிகை மூன்று முறை வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். விஜயலட்சுமியுடனான உறவுக்குப் பிறகு இருவரும் பிரிந்தனர். சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக கடிதமும் கொடுத்துள்ளார். தற்போது சீமான் மீதான பழைய புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சீமானின் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “புகார் கொடுத்த பெண்ணும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா? என்றார்கள். அதற்குப் பதிலளித்த சீமான், விஜயலட்சுமியுடன் தனிச் சந்திப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க முயற்சி எடுத்து வருகிறோம் என்றார். இதையடுத்து நடிகை விஜயலட்சுமி சீமான் மீது தொடரப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும், இந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்து, மேல்முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
பின்னர், விசாரணை மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த இடைக்காலத்தில் இருதரப்புக்கும் இடையே இணக்கமான பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.