திருச்சி: தமிழகத்தில் எங்களை வைத்து அரசியல் செய்ய நினைக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும்போது, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனால் இன்று இந்நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு… கூட்டணி கட்சிகளால் அவருக்கு (திருமாவளவன்) எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், அவருடைய மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும்’ என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக நேற்று திருச்சியில் நிருபர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவத: “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அம்பேத்கர் நினைவு நாளில் அம்பேத்கர் தொடர்பான நூலை வெளியிட்டு இருப்பதும், அம்பேத்கரைப் பற்றி பேசி இருப்பதும் பெருமை அளிக்கிறது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் அழுத்தம் என்ற கருத்தை அவர் பதிவு செய்திருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுப்படுத்தி இருக்கிறேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்க கூடிய அளவுக்கு நானும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் தேர்தல் களத்தில் நாங்கள் நிற்கிறோம். ஓரளவு எங்களாலும் யூகிக்க முடியும். யார் எந்த பின்னணியில் இயங்குகிறார்கள், பேசுகிறார்கள் என்பதை கணிக்க முடியும். அந்த வகையில் தான் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை அரசியலாக்கி விடுவார்கள். அப்படி அரசியல் படுத்துவதை நான் விரும்பவில்லை. இந்த அடிப்படையில் தான் தனியார் புத்தக வெளியீட்டாளர் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளேன்.
விஜய் மீது எந்த வருத்தமும் இல்லை. தமிழகத்தில் எங்களை வைத்து காய் நகர்த்துகின்ற அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். நான் சுதந்திரமாக, விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு எந்த பாதகமும் ஏற்படாத வகையில் எடுத்த முடிவு. இதில் எந்த அழுத்தமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.