தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நட்சத்திர அந்தஸ்து என்றால் திருவையாறு தொகுதிக்குதான். ஆன்மீகத்திற்கும், இசைக்கும் முக்கியத்துவம் கொண்ட தொகுதி. திமுக கோட்டையாக விளங்கும் இந்த தொகுதிக்கு புது ரத்தம் பாய்ச்ச புதுமுகத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த தேர்தல் சீட் ரேஸில் கடம்பன்குடி சீனிவாசன் பெயர் அதிகளவில் எதிரொலிக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரியமிக்க திமுக கோட்டையாகக் கருதப்படும் திருவையாறு சட்டமன்றத் தொகுதி, வரவிருக்கும் தேர்தலில் அனைவரும் உற்று கவனிக்கும் சுவாரசியமான அரசியல் களமாக மாறியுள்ளது. திருவையாறு என்றாலே தியாகராஜர் ஆராதனையும், அசோகா அல்வாவும் உலகம் முழுவதும் பிரசித்தம். இப்போது அடுத்ததாக திருவையாறு தொகுதி யாருக்கு கிடைக்கும் என்ற பேச்சு மாவட்டம் முழுவதும் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. 5வது முறையாக வெற்றி வாகை சூடியுள்ள தற்போதைய எம்.எல்.ஏவு-ம், மத்திய மாவட்ட செயலாளருமான துரை.சந்திரசேகர் ஒருபுறம் மீண்டும் களம் காணும் துடிப்புடன் களப்பணியாற்றி வருகிறார். மற்றொரு புறம் இளைய தலைமுறை நிர்வாகிகள் எங்களுக்கும் வாய்ப்பு கொடுத்து பாருங்கள் தொகுதிக்கு புது ரத்தம் பாய்ச்சுவோம் என்று அறிவாலயத்தின் பார்வை தங்கள் பக்கம் திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக வாக்குகள் அதிகம் உள்ளது. கடந்த காலங்களில் அதே சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களைக் களமிறக்கி திமுக வெற்றியைத் தக்கவைத்து வந்துள்ளது. தற்போது மத்திய மாவட்டச் செயலாளராகவும் இருக்கும் துரை சந்திரசேகர், மீண்டும் போட்டியிட்டு வென்று அமைச்சராக வேண்டும் என்ற இலக்குடன் காய் நகர்த்தி வருகிறார். இருப்பினும் கூட்டணியில் உள்ள மூ.மு.க தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் மக்கள் நீதி மையம் பாடலாசிரியர் சினேகன் ஆகியோரும் இத்தொகுதி மீது ஆர்வம் காட்டுவதாகத் பரபரப்பு தகவல்கள் உலா வருகிறது.
திமுக தலைமைக்கே கட்சியில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற விருப்பம் அதிகரித்துள்ளதாம். அதனால் இம்முறை புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சு வெகு அழுத்தமாக எழுந்துள்ளது. அந்த வரிசையில், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தின் ஆதரவாளரும், பொறியாளர் அணி மாவட்டத் துணை அமைப்பாளருமான கடம்பன்குடி சீனிவாசன் பெயர் முன்னணியில் உள்ளது.
கடம்பன்குடி சீனிவாசன் (38). கல்வித் தகுதியிலும் (M.Tech., MSW., LL.B), கட்சிப் பணியிலும் தலைமையின் பார்வையை தன் பக்கம் வெகுவாக கவர்ந்துள்ளார். 2006-ம் ஆண்டு பள்ளிப் பருவத்திலேயே கழகப் பணியைத் தொடங்கியவர். நீண்டகால விசுவாசம் கொண்டவர். 2017-ல் கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்படி சொந்தச் செலவில் குளம் தூர்வாரி மக்களின் கவனத்தைப் பெற்றார்.
2011-ல் அப்போதைய துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இளைஞரணி நேர்காணலில் பங்கேற்றவர். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வேட்பாளராகவும் முன்னிறுத்தப்பட்டவர். சீனிவாசன் தவிர, இளைஞரணி முகில் வேந்தன், மகளிரணி ரமணி சுப்பிரமணியன், அண்ணாதுரை மற்றும் கல்லணை செல்லக்கண்ணு ஆகியோரின் பெயர்களும் கட்சி மேலிடத்தின் ஆலோசனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
“அனுபவமா? அல்லது இளரத்தமா?” என்ற திருவையாறு விவாதம் திருவையாறு திமுகவினரிடையே அனல் பறக்கிறது. சிட்டிங் எம்.எல்.ஏ-வுக்குப் பதிலாகப் புதிய முகத்தைச் சட்டப்பேரவைக்கு அனுப்பத் தலைமை முன்வருமா என்பது விரைவில் தெரியவரும். எது எப்படி இருந்தாலும் இம்முறை திருவையாறு தொகுதி அனைவரும் கவனத்தையும் ஈர்த்து உற்று நோக்கும் தொகுதியாக உள்ளது. தலைமை என்ன முடிவு எடுக்கும் என்று திமுக நிர்வாகிகளும் அனல் பறக்க காத்திருக்கின்றனர்.