விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் அதிகாலை முதலே விக்கிரவாண்டியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால், காலை 11 மணிக்கே மாநாட்டு மைதானத்தில் வாகன நிறுத்துமிடம் நிரம்பி வழிந்தது. எனினும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தற்போது வரை தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, தொண்டர்கள் அங்கிருந்து நடந்து செல்கின்றனர். வி.ரோடு பகுதியில் உள்ள அனைத்து உணவகங்களிலும் காலையிலேயே உணவு தீர்ந்து போனதால், அப்பகுதியில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக தெரிகிறது. இது போன்ற பல்வேறு நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொண்டர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் இருக்கவே மாநாடு முன்கூட்டியே தொடங்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த மாநாட்டில் கல்வி, விவசாயம், பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி விஜய் பேசுவார் என்று கூறப்படுகிறது. விஜய் மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தவெக மாநாட்டுக்கு வந்திருந்த வாலிபர் திடீரென மயங்கி விழுந்ததால், மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். இதுபோல் மாநாட்டு திடலில் தண்ணீர் வசதியின்றி பலர் ஆங்காங்கே மயங்கி விழுந்தனர். பின்னர், அனைவருக்கும் தண்ணீர், பிஸ்கட் வழங்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்தார்.
அதன்படி, மாநாட்டு ஊழியர்கள் தண்ணீர் பாட்டில்களை வழங்கினர். மாநாட்டிற்கு கைக்குழந்தைகள் மற்றும் முதியவர்களை அழைத்து வரக்கூடாது என வலியுறுத்தியும் பல பெண்கள் குழந்தைகளுடன் வந்தனர். விஜய்யை பார்க்க வந்த அவர்கள், அவரை உள்ளே அனுமதிக்காவிட்டால் தர்ணாவில் ஈடுபடுவோம் என்று கூறினர்.
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவெக வாகனங்கள் தவிர, மற்ற வாகனங்கள் மாற்று வழிகளில் அனுப்பப்படுகின்றன. செஞ்சி புறவழிச்சாலையில் இருந்து கனரக வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.