சென்னை: எல்லை நிர்ணயத்துக்கு எதிராக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்தின்படி, சென்னையில் இன்று மார்ச் 22-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ‘கூட்டு நடவடிக்கை குழு’ அமைத்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் ஏற்கனவே தமிழகம் வந்துள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் இன்று காலை சென்னை வந்தார். அவரை தமிழக அமைச்சர் பொன்முடி, திமுக எம்பி அப்துல்கலாம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் வரவேற்றனர். டி.கே. சிவக்குமார் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து “தமிழக முதல்வர் ஸ்டாலினின் அழைப்பின் பேரில் இங்கு வந்துள்ளேன், இந்த கூட்டத்தை கூட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துகிறேன், கூட்டாட்சி அமைப்பையும், அரசியலமைப்பையும் காப்பாற்றி வருவதை பெருமையாக கருதுகிறோம்.

இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை இன்று ஆலோசிப்போம். இணைந்து செயல்படுவோம். தெலுங்கானா, பஞ்சாப், கேரளா மாநில முதல்வர்கள் ஏற்கனவே வந்துவிட்டனர். எக்காரணம் கொண்டும் எங்கள் தொகுதிகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். நாம் ஒற்றுமையாக நின்று நமது மாநிலங்களின் தொகுதிகள் குறையாமல் பார்த்துக் கொள்வோம். நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றுபடுகிறோம். நமது சொந்த லாபத்திற்காக அல்ல. நாட்டின் வளர்ச்சிக்கு நமது மாநிலங்கள் நிறைய பங்களிக்கின்றன.
ஆனால், கல்வி வளர்ச்சிக்கும், மக்கள் தொகைக் கட்டுப்பாடுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் மாநிலங்களை மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்து மத்திய அரசு பழிவாங்குகிறது. முயற்சிக்கிறது. மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்கள் மாநிலத் தொகுதிகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்றார்.
தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடக, கேரள தலைவர்களுக்கு மாநில பா.ஜ.க., சிவப்பு கம்பளம் விரிக்கும் என்றும், முதல்வர் ஸ்டாலினை கண்டித்து தமிழக பா.ஜ.க., சார்பில் இன்று கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்றும் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சிவக்குமார், “அவர் நம் மாநிலத்தில் அரசு அதிகாரியாக இருந்தார். இன்று அவர் வேறு பாதையில் செல்கிறார். அவர் வேலையை செய்யட்டும். எங்கள் வேலையை நாங்கள் செய்கிறோம். பாஜகவின் கருப்புக்கொடிகளை வரவேற்கிறேன். என்னை திகார் சிறைக்கு அனுப்பினாலும் பயப்பட மாட்டேன்” என்றார்.