மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உ.பி.யைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றுதான் என்று மேற்கு வங்க முதல்வர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் போலி வாக்காளர்களும், வெளி மாநில வாக்காளர்களும் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில், “இவை போலி வாக்காளர் அட்டைகள் அல்ல. ஒரே எண்ணிக்கையில் இருந்தாலும், தொகுதி மற்றும் வார்டு எண் உள்ளிட்ட விவரங்கள் வேறுபட்டவை.

இருப்பினும், இப்பிரச்னை 3 மாதங்களில் தீர்க்கப்படும்.” இந்நிலையில், நேற்று பார்லிமென்டுக்கு வெளியே பேசிய திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி., சாகரிகா கோஷ், “ஒற்றை எண் வாக்காளர் அட்டை விவகாரம் குறித்து, பேரவையில் விவாதிக்கப்படும் என, சபாநாயகர் ஏற்கனவே உறுதியளித்தார். கடந்த சில நாட்களாக, இது தொடர்பாக, நோட்டீஸ் கொடுத்து வருகிறோம். ஆனால், தினமும், ஏதாவது ஒரு காரணத்தை கூறி, அனுமதி மறுக்கப்படுகிறது. இது, நாடு முழுவதும், நியாயமான பிரச்னை,” என்றார்.