அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து தலைவர்களில் ஒருவராகவும், கொங்கு மண்டலத்தின் முக்கிய பிரமுகராகவும் திகழ்ந்தவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகிய 3 பேரையும் அதிமுகவில் இணைத்துக் கொள்வதில் அவர் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, செங்கோட்டையனை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி மதிக்கவில்லை என்றும், நிர்வாகிகள் நியமனத்தில் செங்கோட்டையன் பரிந்துரைகளை ஏற்கவில்லை என்றும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி கோவையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. அழைப்பிதழ் மற்றும் பேனர்களில் மூத்த தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இல்லை என்று கூறி, நிகழ்ச்சியில் பங்கேற்பதை செங்கோட்டையன் தவிர்த்தார்.

அப்போதிருந்து, செங்கோட்டையன் பழனிசாமியிடம் இருந்து விலகி இருக்கிறார். அவருடனான சந்திப்புகளை தவிர்த்து வருகிறார். சட்டசபைக்கு வந்தாலும் அதற்கு முன் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்தார். பழனிசாமி உள்ளிட்டோர் வழக்கமாக வரும் நுழைவாயிலையும் அவர் தவிர்த்து வந்தார். இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எப்போதும் கூறி வந்த பழனிசாமி, கடந்த மார்ச் 25-ம் தேதி டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.
உடனே அமித் ஷா, 2026 தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே அனைவரும் எதிர்பாராத வகையில் கடந்த 28-ம் தேதி செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல் வெளியானது. அ.தி.மு.க., கூட்டணியில் சேராவிட்டால், செங்கோட்டையனை பயன்படுத்தி, அக்கட்சியில் பிளவை ஏற்படுத்த, பா.ஜ.க., முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.