சென்னை: தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். கடந்த 13-ம் தேதி திருச்சியில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய விஜய், அன்று திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், வழியில் ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால், குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமதி வழங்கப்பட்ட இடங்களுக்கு விஜயால் செல்ல முடியவில்லை.
இதன் காரணமாக, திருச்சி மற்றும் அரியலூரில் மட்டுமே பொதுக்கூட்டங்களை நடத்த விஜய் முடிவு செய்து, பெரம்பலூருக்குச் செல்வதற்குப் பதிலாக, சென்னைக்கு வந்துள்ளார். இந்த நிலையில், விஜய் சென்னையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, சென்னை மாவட்டச் செயலாளர் அப்புனு தலைமையிலான தவெக நிர்வாகிகள் நேற்று காவல் ஆணையர் அருணிடம் அனுமதி கோரி மனு அளித்தனர்.

அதன்படி, செப்டம்பர் 27-ம் தேதி விஜய் வட சென்னைக்கும், அக்டோபர் 25-ம் தேதி தெற்கு சென்னைக்கும் சாலை வழியாக மக்களைச் சந்திக்கவுள்ளார். முல்லை நகர், அகரம், ராயபுரம், புளியந்தோப்பு, கொருக்குப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், எம்ஜிஆர் நகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், கண்ணகி நகர், ஆலந்தூர், வேளச்சேரி, வில்லிவாக்கம், அயனாவரம், அயனாவரம், மதுரவாக்கம், மதுரவாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் விஜய் பேசுவார் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனவே இதற்கு உரிய போலீஸ் பாதுகாப்பும் அனுமதியும் வேண்டும் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.