புதுடெல்லி: ஒடிசாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது என்று பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோபால்பூர் கடற்கரையில் 20 வயது இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 சிறுவர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது ஆண் நண்பருடன் அப்பெண் கடற்கரைக்குச் சென்றிருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரில், பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் தங்களை நெருங்கி நண்பரை கட்டிப்போட்டு, தன்னை கூட்டுப் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் குற்றவாளிகள் வேறு மாநிலத்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், ஒடிசாவில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்பியுமான பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரியங்கா காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஒடிசாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 44,000 பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் என முதல் மந்திரியே ஒப்புக்கொண்ட ஒரு மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்காதது பெண்களுக்கு எதிரான அட்டூழியம் என பதிவிட்டுள்ளார்.