கேரளா: வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை (13-ந் தேதி) நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
மக்களவை தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்தியன் மொகேரி, பாரதிய ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பிரியங்கா காந்தியை பொருத்தவரை வேட்பு மனு தாக்கல் செய்த தினத்தில் தனது முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். பின்பு கடந்த 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை இரண்டாம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நேற்று தனது 3-ம் கட்ட பிரசாரத்தை தொடங்கினார். அதேபோன்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் வேட்பாளர்களும் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.
வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை (13-ந்தேதி) நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.