விழுப்புரம்: ”விக்கிரவாண்டியில் நடக்கும் தவெக மாநாடு குறித்து, காவல் துறையினர் கேட்ட 21 கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
“காவல் துறையில் அனுமதி கிடைத்ததும், மாநாட்டு தேதியை கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார்” என, கட்சியின் பொதுச்செயலாளர் என்.புஸ்ஸி ஆனந்த் அறிவித்தார்.
தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் விழுப்புரத்தில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக வெற்றி கழகம் சார்பில், கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, கட்சியின் முதல் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல் துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் போலீஸார் 21 கேள்விகளை எழுப்பினர்.
அந்த 21 கேள்விகளுக்கு இன்று விடை கொடுத்துள்ளோம். மேலும், மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து, ஓரிரு நாட்களில் உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு, மாநாடு நடைபெறும் தேதியை கட்சித் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்,” என்றார். விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு, “விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்த அனுமதி கோரி காவல் துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
காவல் துறையினர் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளோம். காவல் துறை அனுமதி வழங்கிய பிறகு, மாநாட்டு தேதியை கட்சித் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்,” என்றார்.
காவல் துறை தாமதம் செய்வதாக கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, “ஏற்கனவே கொடுத்த கடிதத்திற்கு 5 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்று காவல் துறை கூறியிருந்தது. அதன்படி பதில் அளித்துள்ளோம்.
காவல் துறை எழுப்பிய கேள்விகள் தொடர்பான கடிதம் திங்கள்கிழமை எங்களுக்கு கிடைத்தது. 5-வது நாளான இன்று பதில் கடிதம் கொடுத்துள்ளோம். எனவே, உயரதிகாரிகளிடம் பேசி நல்ல பதிலை தருவார்கள் என எதிர்பார்க்கிறோம்,” என்றார்.