சேலம்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை சேலம் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் நெசவு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி சேலம் இடங்கணச்சாலையில் தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. தொழில் நன்றாக இருந்தால் மத்திய அரசு ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை விதிக்கலாம்.
ஆனால் தொழில் மிகவும் நலிவடையும் போது வரிகளை விதிக்கின்றனர். எனவே, மத்திய அரசு ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும். அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு பலமுறை பதில் அளித்துள்ளேன். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் உள்ளன.
விஜய் கட்சியுடன் கூட்டணி அமையுமா என்று கேட்கிறீர்கள். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். முதலில் அவர் மக்களை சந்திக்கட்டும். அவர் தன்னை நிரூபிக்கட்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்ல முடியாது. 140 கோடி மக்களின் எதிர்காலம் இதில் உள்ளது. எனவே மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.