திருச்சி: மத்திய அரசுக்கு பாராட்டு கிடைக்கும் திட்டங்களை தாமதப்படுத்துகிறது திமுக என்று பிரதமர் மோடி குற்றச்சாட்டியுள்ளார்.
மத்திய அரசுக்கு பாராட்டு கிடைக்கும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை திமுக அரசு தாமதப்படுத்துவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். திருச்சி பஞ்சப்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தே.ஜ.கூ தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
‘மேற்காசியாவில் நடக்கும் போரானது உலகளவில் ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியையும் பாதித்துள்ளது. இந்திய மக்களின் நலனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும். வதந்திகளை நம்ப வேண்டாம். வரும் சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. மோசடி, போதைப் பொருள், ஏமாற்றத்தை நோக்கி திமுக அழைத்துச் செல்கிறது. ஆனால் தமிழ்நாடு மாற்றத்தை விரும்புகிறது. தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது.
‘2021-ல் ஆட்சி அமைத்த திமுக அதன் கடமைகளைச் செய்ய தவறிவிட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளன. நெல்லுக்கான ஆதரவு விலையை திமுக உயர்த்தவில்லை. நெல்லை பாதுகாக்க உரிய கிடங்குகளும் தமிழ்நாட்டில் இல்லை. மக்கள் நலனை விட அரசியல் நலனே திமுகவுக்கு முக்கியம். மத்திய அரசுக்கு பாராட்டு கிடைக்கும் என்பதற்காக திட்டங்களை நிறைவேற்றுவதை தாமதப்படுத்துகிறது திமுக அரசு. ஊரகப் பகுதிகளில் ஏழைகளுக்கு வீடுகள், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் நகரங்களில் புல்லட் ரயில் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக மெத்தனமாக இருந்தது. தமிழ்நாட்டிற்கு ரூ. 16 லட்சம் கோடி மத்திய அரசு கடன் அளித்துள்ளது.
திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் உள்ளது. திமுகவைச் சேர்ந்தவர்களே பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதை செய்திகளில் பார்த்தோம். பெண்கள் அச்சமின்றி வாழ்வதை தேஜ கூட்டணி உறுதி செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.