சென்னை: புதிய விண்ணப்பதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்ற தகவல்கள் உலா வருகிறது.
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகள் பலருக்கு கலைஞர் மகளிர் உதவித் தொகையில் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு பணம் எப்போது வழங்கப்படும்? யார் யாருக்கு வழங்கப்படும்? என விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.
2021ல் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்த நிலையில், ரேசன் அட்டைதாரர்களான குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த 2023ம் ஆண்டில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் பலர் இந்த திட்டத்திற்கு தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டு உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.
இதில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து கேள்வி எழுந்த நிலையில், அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும், கூடுமானவரை அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து உரிமைத் தொகை வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டிருந்தது. அதன்படி சமீபத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களும், மேலும் பல புதியவர்களும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்திருந்தனர்.
அடுத்த 3 மாதங்களுக்கு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிதாக விண்ணப்பித்தவர்களில் தகுதி பெற்றவர்களின் பட்டியல் பிப்ரவரி மாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மார்ச் 1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வருகிறது.
அதையொட்டி ஏற்கனவே உரிமைத் தொகை பெறுபவர்கள், புதிதாக பெற உள்ளவர்கள் அனைவருக்கும் மார்ச் 1ம் தேதியே உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து குடும்ப தலைவிகள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.