தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட போலீசார் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 260 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு தலைப்புகளில் தஞ்சை மாவட்ட போலீசார் விழிப்புணர்வு அளித்தனர்.
இதில் குழந்தைகளுக்கான பாலியல் வன்கொடுமை, சைபர் க்ரைம் மோசடி, குழந்தைகளுக்கு தற்காப்பு செய்முறை பற்றி விளக்கம், தஞ்சாவூர் காவல்துறையில் உரக்க சொல் செயலி(app) பற்றியும், குற்றச்சம்பவங்கள் குறித்து அதில் எவ்வாறு பதிவிடுவது என்பது பற்றியும் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் காவலன் செயலி(app) பற்றி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல் செல்போன்களால் ஏற்படும் பாதிப்புகளையும், மாணவ, மாணவிகள் செல்போன்களை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதும் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு முகாமில் ஒரத்தநாடு ஏ.எஸ்.பி., ஷஹ்னாஸ், திருவையாறு டி.எஸ்.பி., அருள்மொழிவர்மன், மாவட்ட குற்றப்பதிவேடு கூடம் டி.எஸ்.பி., திவ்யா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித், பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.