திருவையாறு: திருவையாறு முழு நேர கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் எப்போது கட்டப்படும் என்று பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் எதிர்பார்த்துள்ளனர்.
திருவையாறு அரசு முழுநேர கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு 15. 3. 2023-ல் பூதலூரில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டப்பட்டு ஒராண்டு ஆகியும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை.
திருவையாறு நகரில் இயங்கி வரும் அரசு முழு நேர கிளை நூலகம் கடந்த 1965ம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்த நூலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. பின்னர் 2012ம் ஆண்டு முதல் சத்திரம் நிர்வாகத்திலுள்ள அரசர் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்திற்கு நூலகம் இடமாற்றம் செய்யப்பட்டு பழைய ஓட்டு கட்டடத்தில் கிளை நூலகம் முழு நேரமாக இயங்கி வருகிறது.
இந்த நூலகத்தில் சுமார் 6005 உறுப்பினர்கள் உள்ளனர். சுமார் 40, 000 நூல்களுக்கும் மேல் உள்ளது நாள்தோறும் 100க்கு அதிகமான பொதுமக்கள், வாசகர்கள் வந்து படித்து இந்த நூலகம் பழைய கட்டிடத்தில் இயங்கி வருவதால் கட்டிடத்தில் பல்வேறு பகுதிகள் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து எந்த நேரமும் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழை காலத்தில் மழை நீர் இறங்கி புத்தகங்கள் வீணாகும் நிலை ஏற்படுகிறது. இதனால் முழு நேர அரசு கிளை நூலகத்திற்கு அரசு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று வாசகர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.