சென்னை: தமிழ்நாட்டில் மகளிரின் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் அக்டோபர் 2 முதல் விரிவுபடுத்தப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக 12,692 அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க முடியும்.
எந்த பேருந்துகளில் இலவசம்?
மாநகரம் மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள், மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கிலோமீட்டருக்கு மேல் இயக்கப்படும் மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் ஆகியவை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

12,692 பேருந்துகள்
தமிழ்நாட்டில் 7 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் திட்டமிடப்பட்டுள்ள 18,413 பேருந்துகளில் 12,692 பேருந்துகள் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. இது மொத்த பேருந்துகளில் சுமார் 69 சதவீதமாகும்.
மொத்தம் 1,94,649 திட்டமிடப்பட்ட பேருந்து நடைகளில் 1,65,312 நடைகள் இந்தத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட உள்ளன. இது சுமார் 85 சதவீதமாகும்.
84 லட்சம் பெண்கள் பயன்பெற வாய்ப்பு
திட்டத்தின் மூலம் தினமும் சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவிகள் கல்லூரிகளுக்கும், பெண்கள் பணியிடங்களுக்கும், பொதுமக்கள் மருத்துவமனைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கூடுதல் கட்டணச் சுமையின்றி செல்லும் வாய்ப்பு உருவாகும்.
மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களுடன் பேருந்துகளை இணைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், சோதனை மற்றும் சரிபார்ப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
