கடலூர்: தமிழகத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்று நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட சிதம்பரம் பகுதியை சேர்ந்த 30 பேரில் 10 பேர் இன்று வீடு திரும்புகின்றனர்.
மேலும் 20 பேர் நாளை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 18 ஆண்கள், 12 பெண்கள் உள்பட 30 பேர் கடந்த 1-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆதிகைலாஷ் கோயிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர்.
பல்வேறு ஆன்மிக தலங்களுக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது ஆதிகைலாஷிலிருந்து 18 கி.மீ. தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள ஒரு ஆசிரம பகுதியில் 30 பேர் பாதுகாப்பாக தங்கினர்.
நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் அடைப்பு ஏற்பட்டதால், கடந்த 6 நாட்களாக வெளியே வரமுடியாமல் தவித்தனர். இதற்கிடையில், இந்த குழுவில் இருந்த ரவிசங்கர், கடந்த 14-ம் தேதி சிதம்பரத்தில் உள்ள தனது மகன் ராஜனை தொடர்பு கொண்டு, தாங்கள் சிக்கியதாக தெரிவித்தார்.
ஆனால், அதன் பிறகு அவர்களை மொபைலில் தொடர்பு கொள்ள முடியவில்லை. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனடியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்து மீட்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரகாண்ட் மாநில அதிகாரிகளை தொடர்பு கொண்டு ராணுவம் மூலம் 30 பேரையும் மீட்க நடவடிக்கை எடுத்தார். நேற்று முன்தினம் முதல் கட்டமாக 15 பேரும், 2-ம் கட்டமாக 15 பேரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு தார்சுலைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களை செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
இந்நிலையில், அவர்கள் வேனில் டெல்லிக்கு அழைத்து வரப்படுகின்றனர். அங்கிருந்து 30 பேரையும் சிதம்பரம் அழைத்து வருவதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
அவர்களில் 10 பேர் இன்றும், மீதமுள்ள 20 பேர் நாளையும் சிதம்பரம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.